ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 30, 2012

விடியல்..!



அதிகாலை நேரத்தில்
கிராமத்தில்
சேவல் கூவினால்
அது விடியல்..!
அதுவே நகரத்தில்
கூவினால்
அது சமையல்...
நீங்கள்
நகரத்தினர்களே ஆயினும்
கிராமத்து சேவலாகவே
விழியுங்கள்...
உங்களுக்காக மட்டுமின்றி
உலகிற்கான விடியலை
தட்டி எழுப்பலாம்..!




Friday, November 23, 2012

யார் செல்வந்தன்?



உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..
அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!
ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…
இதில் யார் செல்வந்தன்?




Wednesday, November 21, 2012

குழந்தையின் தூக்கம்!



தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

++++++++++++++++++++++++++++++++++++++

அன்பான நட்பு வட்டங்களுக்கு...

கவிதை எழுதி நெடுநாட்களாகி விட்டது. நேரமின்மையும் வேலைப்பளுவும் இதற்கு காரணம். தற்போது அச்சூழல்கள் எனை விட்டு சற்று விலகி இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. மீண்டும் அதே உத்வேகத்துடன் உங்களை இனி சந்திக்கிறேன் என் கவிதைகளோடு... மீண்டும் உங்களின் விமர்சனக் கணைகளால் எனை அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்